கரும்பு உற்பத்தியால் சர்க்கரை நோய் அதிகரிப்பு – உ.பி.முதல்வர் சர்ச்சை பேச்சு

பால் பொருட்கள் உற்பத்தியில் பதஞ்சலி நிறுவனம்
September 14, 2018
நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?
September 15, 2018

கரும்பால் சர்க்கரை நோய் வரும் என்பதால் கரும்பு உற்பத்தியை நிறுத்தும்படி விவசாயிகளுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கி உள்ளார்.

உ.பி.,யில் கரும்பு உற்பத்தி பணிகள் அக்டோபர் 20 முதல் துவங்க உள்ளன. ஏற்கனவே கரும்பு விவசாயிகள் ரூ.10,000 கோடி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பக்பத் மாவட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.

 

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்வதால் மக்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பிற்கு பதிலாக காய்கறிகளை உற்பத்தி செய்தால் நீங்கள் அதிக லாபம் ஈட்டலாம் என்றார்.

 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

கரும்பு கடன்களை தள்ளுபடி செய்யாததால் உ.பி., அரசு ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் விவசாயிகளிடம் கரும்பு உற்பத்தியை நிறுத்தும்படி முதல்வர் பேசி உள்ளார் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் டுவீட் செய்துள்ளார்.

 

ஆனால் முதல்வர் வேடிக்கைக்காக தான் அவ்வாறு பேசினார் எனவும், கரும்பு கடன்களை தள்ளுபடி செய்யவே அவர் திட்டமிட்டு வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கரும்பு கடன்களை தள்ளுபடி செய்யாததன் காரணமாக சமீபத்தில் நடந்த கைரானா லோக்சபா தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., கடும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *