ஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்!!

டிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் ?
October 17, 2018
இந்திய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில்
October 20, 2018

தங்க ஆபரணம் வாங்கும் மக்களுக்கு சில டிப்ஸ்:

1. சேதாரம் வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இதுவும் கடைக்கு கடை மாறுபடும். சில கடைகளில், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும், மற்றவர்களிடம் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும். செல்லும் முன் சற்றே விசாரிப்பது நல்லது.

2. தர முத்திரை தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும். BIS முத்திரை என்பது கீழ்க்காணும் 5 அம்சங்களை உள்ளடக்கியது…

* பிஐஎஸ் முத்திரை. தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும். * பிஐஎஸ் முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை.

* குறிப்பிட்ட நகைக்கு பிஐஎஸ் முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். கடந்த ஆண்டுக்கு, (2016) ‘Q’ என்ற எழுத்து இருக்கும்). *நகை விற்பனையாளரின் முத்திரை.

3. ஆன்டிக் நகைகள் ஆன்டிக் (பழங்கால) நகைகளுக்கு சேதாரம் 25% – 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலை எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மெஷின் செயின் வேண்டாம் மெஷினில் செய்யப்பட்டும் செயின்கள் அறுந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கலாம். ஆனால், எது மெஷின் கட் செயின், எது கையால் செய்யப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் கண்டறிந்துகொள்வது சிரமமே! நம்பிக்கையுள்ள நகைக்கடையில் வாங்கும்போது, அவர்களிடமே அதுபற்றி கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்.

5. காரட் – விளக்கம் தூய தங்கத்தை நகைகளாகச் செய்தால் உடைந்துவிடும். எனவே, அதன் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 24 கேரட் தங்கம் என்பது, 100% தூய தங்கம். 916 தங்கம் என்பது, 91.6% தூய தங்கம். அதாவது, அதில் மீதியுள்ள சதவிகிதம் மற்ற உலோகங்களின் கலவை. 22 காரட் சுத்த தங்கமான இதில், மற்ற இரண்டு காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. இப்படி கலந்தால்தான் தங்கத்தை நகையாக வார்க்க முடியும். இதில் 19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும்.

6. எடையில் கவனம் என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

7. பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம்களை கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்கு வதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்ற வேண்டியதும் அவசியம்.

8. ‘கேடிஎம்’ தவிர்க்கவும் ‘கேடிஎம்’ (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை கடையை பொறுத்தே அமையும் என்பதால், ‘கேடிஎம்’ என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, ‘பிஐஎஸ்’ முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.

9. ரசீது அவசியம் தங்க நகை வாங்கும்போது அதற்கு உண்டான ரசீது வாங்குவது அவசியம். ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்சனை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *